×

ஊட்டி,மஞ்சூர், கீழ்குந்தா, பிக்கட்டியில் மக்களை தேடி சிறப்பு முகாம்

ஊட்டி, டிச.2: மக்களை தேடி மக்களின் அரசு என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் முகாமை துவக்கி வைத்து கலெக்டர் அம்ரீத் மனுக்களை பெற்றுக் கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 41 இடங்களில் மக்களை தேடி மக்களின் அரசு என்ற சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டியில் உள்ள காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் உள்ள உருது நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமினை மாவட்ட கலெக்டர் அமரீத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அம்ரீத், மனுக்கள் மீதான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். 5 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு தகுதி அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என தெரிவித்தார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் நேற்று மக்களை தேடி மக்களின் அரசு என்ற சிறப்பு முகாம் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 41 இடங்களில் இம்முகாம் நடக்கிறது. 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கிறது. இம்முகாமில், குடியிருப்பு, ஓய்வூதியம், அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை தேவைப்படும் மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்படும். வனத்துறை அமைச்சர் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. குடியிருப்புகள் கேட்கும் மக்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாயத்து பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில் இல்லை. மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் இரு தடுப்பூசிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மஞ்சூர்:  மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நடந்த மக்களை தேடி மக்களின் அரசு சிறப்பு முகாமில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. குந்தா வருவாய்துறை சார்பில் கீழ்குந்தா கிராம சமுதாய கூடத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு தாசில்தார் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், கீழ்குந்தா சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு மனுக்கள் கொடுத்தனர். மஞ்சூர் அட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்த முகாமிற்கு உதவி ஆணையர் (கலால்) மணி தலைமை தாங்கினார்.

இதேபோல், பிக்கட்டியில் நடந்த சிறப்பு முகாமிற்கு குந்தா வட்ட வழங்கல் அலுவலர் முனீஸ்வரன் எடக்காடு பகுதியில் துணை வட்டாட்சியர் ஜெபசிங் தலைமையிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டம், சாதி சான்றிதழ், பட்டா மாறுதல், நலவாரிய அட்டைகள், சிறு தொழில் கடனுதவி, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி மற்றும் நடைபாதை, கழிவுநீர் கால்வாய்கள், தடுப்புசுவர் கட்டுதல், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி 100க்கும் மேற்பட்டோரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

Tags : Ooty ,Manzoor ,Keelkunda ,Pikatti ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்