விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சாய ஆலையை தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்

திருப்பூர், டிச.2:  திருப்பூரில் சாய ஆலை கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான இடத்தை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் நேற்று பார்வையிட்டார். திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான சாய ஆலை உள்ளது. கடந்த 14 ம் தேதி இந்த சாய ஆலையின் கழிவு நீர்தொட்டியை சுத்தம் செய்தபோது ஊழியர்களான தினேஷ் பாண்டி, வடிவேல், நாகராஜ் ஆகியோர் விஷவாயு தாக்கி முச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்கள். இந்த சம்பவத்தில் நிறுவன உரிமையாளர் தனலட்சுமியின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையதலைவர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆணையத்தின் சார்பில் முழுமையான அறிக்கை கேட்டுள்ளோம். இறந்தவர்களில் 2 பேர் எஸ்.சி வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த வழக்கை போலீசார் சரியான முறையில் கையாண்டு சரியான சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இறந்த 2 பேருக்கு தலா ரூ.8.25 லட்சம் வழங்கப்படும். அதனை இரண்டு தவணையான வழங்கப்படும்.  இறந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இறந்த எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அரசாங்க வேலை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட அரசுஅதிகாரிகள் மீதும் வழக்குப்பதிய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

More