திருப்போரூர் ஒன்றியத்தில் நெம்மேலி சாலையில் சாய்ந்த மின் கம்பங்கள்: ஓய்ந்த மழையால் மக்கள் நிம்மதி

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியம், நெம்மேலி சாலையில் இருந்த கம்பங்கள், கனமழை காரணமாக சாய்ந்தன. ஒருநாள் ஓய்ந்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் கடந்த 1 மாதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஏரிகளில் தண்ணீர் நிரம்பின. இதையொட்டி, ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை ஆகியவற்றில் வெள்ளநீர் காட்டாறாக பாய்ந்தது.

பல்வேறு குடியிருப்பு மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா வீடுகள் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலரும் வீடுகளை காலி செய்து ஓட்டல்களில் குடியேறினர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் மழை பெய்யாமல் பல இடங்களில் வெயில் வந்து சென்றது. இதன் காரணமாக வெள்ளநீர் ஓரளவுக்கு வடியத் தொடங்கி, பல்வேறு இடங்களில் மக்கள் நடமாடத் தொடங்கினர். வீட்டுக்கு வெளியேயும், மொட்டை மாடிகளிலும் தினமும் பயன்படுத்தும் உடைகளை துவைத்து காயப்போட்டனர்.

ஓஎம்ஆர் சாலையையும் ஈசிஆர் சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் மற்றும் நெம்மேலி இடையே 4 கிமீ இணைப்பு சாலையும், பக்கிங்காம் கால்வாய் பாலமும் உள்ளது. வெள்ளநீரின் வேகம் காரணமாக இந்த சாலையை முழுவதும் மறைத்து தண்ணீர் சென்றதால் நெம்மேலி சாலையின் ஓரமாக நடப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. புதிய மின் தடம் அமைக்க நடப்பட்டதால் இவற்றில் மின் வயர்கள் இணைக்கவில்லை. இதனால், பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. வெள்ளநீர் முழுமையாக வடிந்த பின்பே சாய்ந்த மின் கம்பங்களை அகற்ற முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், இலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 262 ஏரிகள் உள்ளன. இதேபோன்று, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் 132, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் 108, சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் 69, லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் 56 ஏரிகளும் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

தற்போது மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பெரும்பாலான ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இவை அனைத்துமே விவசாய பாசன ஏரிகள் என்பதால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் அதிகளவில் உயர்ந்து விட்டதால், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: