×

நத்தம் அருகே ஆற்றை கடக்க ஆபத்தான பயணம் உடனே பாலம் அமைக்க கோரிக்கை

நத்தம், டிச. 1: நத்தம் அருகே இடையபட்டி செவகாடு பகுதியில்  100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள்  அரிசி, பால், மளிகை சாமான்கள், சிலிண்டர், மருத்துவம், பள்ளி, கல்லூரி  உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு நத்தம் பகுதிக்குத்தான் வர வேண்டும்.  இடையபட்டி- செவகாடு இடையே காசம்பட்டி ஆறு செல்கிறது. இந்த ஆற்றை  கடந்துதான் அனைத்து தரப்பினரும் சென்று வர வேண்டியுள்ளது.

     தற்போது  தொடர்மழையால் இந்த ஆற்றில் மலைகளில் இருந்து வரும் மழைநீர் காட்டாறாக ஓடி  கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றை கடக்க பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமமடைந்து  வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘தொடர்மழையால் காசம்பட்டி ஆற்றில் முழங்கால் அளவிற்கு காட்டாற்று வெள்ளம்  செல்கிறது. இதனால் மனிதசங்கிலி அமைத்து ஆபத்துடன் கடந்து வருகிறோம். சில  நேரங்களில் கழுத்தளவிற்கு கூட தண்ணீர் வரும். அப்போதும் வேறுவழியின்றி  ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆற்றில் பாலம் அமைக்க கோரி, பல  ஆண்டுகளாக மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காசம்பட்டி ஆற்றில் உடனே பாலம் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Natham Request ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...