வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு 10 பவுன் நகை,₹50 ஆயிரம் கொள்ளை திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல், டிச. 1: திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி இபி காலனி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் துரை. இவர் திண்டுக்கல் அரசு தலைமை போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா (55). அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை துரை வழக்கம்போல் பணிக்கு சென்று விட வீட்டில் சுஜாதா மட்டும் இருந்துள்ளார். இவர்களது வீட்டில் தற்போது கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு அளவு எடுக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய துரையின் மனைவி வீட்டிற்குள் அந்நபர்களை அனுமதித்துள்ளார். வீட்டிற்குள் வந்ததும் திடீரென மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுஜாதாவை சோபாவில் கட்டி போட்டனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சுஜாதாவின் செல்போனை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர். அச்சமயம் துரை தனது செல்போனில் மனைவியை அழைத்துள்ளார். அந்த செல்போனில் பேசிய மர்மநபர்கள் உங்கள் வீட்டிலுள்ள பணம், நகையை கொள்ளையடித்து விட்டோம், உங்களது மனைவியை எதுவும் செய்யவில்லை என கூலாக பதிலளித்து விட்டு போனை கட் செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்தத துரை, உடனே வீட்டிற்கு வந்து சுஜாதாவை விடுவித்து விட்டு, இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ ரபீக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு ெகாள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More