×

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் குறைந்தது

புதுக்கோட்டை, ஏப்.23: தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப்பழங்களின் விளைச்சலும்,ஏற்றுமதியும் இந்த ஆண்டு குறைந்துள்ளதால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அச்சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அரசும் வேளாண்மைத் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்தான் பலாப்பழம் அதிகமாக விளைந்து வருகிறது. பண்ருட்டிக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், செரியலூர், அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான பலாப்பழ சாகுபடியும் ஏற்றுமதியும் நடைபெறுகிறது. இங்கு விளையும் பலாப் பழங்களுக்கு சுவை அதிகம் என்பதால் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலும் இம்மாவட்ட பழங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதனால்தான் இங்கு உற்பத்தியாகும் பலாப்பழங்கள் கைகாட்டி மற்றும் மாங்காடு வடகாடு உள்ளிட்ட பலாப்பழகொள்முதல் மண்டிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாஉள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஆண்டுக்கு 1,500 முதல் 2,000 டன் வரையிலான பலாப்பழங்கள் இப்பகுதியில் இருந்து ஏற்றுமதி ஆகி வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த லட்சக்கணக்கான பலா மரங்கள் ஒடிந்து சாய்ந்தன.

இதனால் புதுக்கோட்டை மாவட்ட பலாப்பழம் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அதன் பின்பு கடந்த ஆண்டு ஓரளவிற்கு விளைச்சல் இருந்ததால் ஆயிரம் டன் வரையிலான பலாப்பழங்களின் உற்பத்தியும் ஏற்றுமதியும் இருந்தது. எனினும் கொரோனா ஏற்படுத்திய கடும் பாதிப்பால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கும் என அப்பகுதி பலா விவசாயிகள் நம்பி இருந்த வேளையில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பலா மரங்களின் காய்ப்பு தன்மையும் குறைந்தது. இதனால் தற்போது சீசன் காலம் என்றாலும் குறைந்த அளவிலான பழங்களே கொள்முதல் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில ஏற்றுமதியும் தடை பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 முதல் 15 கோடி ரூபாய் வரையில் பலாப்பழத்தை நம்பி மட்டுமே வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு இதுவரையில் 3 கோடி ரூபாய் வரையில் கூட வர்த்தகம் நடைபெறவில்லை என்றும், அதுமட்டுமின்றி தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் பழங்களையும் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக அரசும், வேளாண்மை துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து விளைந்த பழங்களை உரிய விலைக்கு ஏற்றுமதி செய்ய போதிய நடவடிக்கைகள் எடுப்பதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி...