திருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பவானி நகர் 5வது வீதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற ‘டிஸ்போசல் பாயின்ட்’ இல்லாததால், கால்வாய் கட்டியும், கழிவுநீர் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தேக்கி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர் சாக்கடை கழிவு நீர் தனது இடத்திற்குள் வராதபடி அடைத்ததாக தெரிகிறது. இதனால், கழிவு நீர் வெளியேற முடியாமல், அந்தந்த வீடுகளுக்கு முன்பு குளம்  போல் தேங்கி கடும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,`வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ‘டிஸ்போசல் பாயின்ட்’ இல்லாததால், தனியாருக்கு சொந்தமான இடத்தில் சென்றடையும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த இடத்திற்கு கழிவு நீர் வராதபடி இடத்தின் உரிமையாளர் அடைத்துவிட்டார். இதனால் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல், ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவு நீர் குளம்போல் தேங்கி கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் ‘டிஸ்போசல் பாயின்ட்’ அமைத்து, குழாய் மூலம் கழிவுநீரை வெளியேற்றுவதே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்றனர்.

Related Stories:

More
>