திமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட்’ அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி

ஒட்டன்சத்திரம், மார்ச் 24: திமுக ஆட்சி அமைந்ததும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர அரசு வேலை, மாணவர்களுக்கு இலவச டேப்லட் வழங்கப்படும் என, அர.சக்கரபாணி எம்எல்ஏ தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜவ்வாதுபட்டி, ஜவ்வாதுபட்டிபுதூர், பருமரத்துப்பட்டி, பெரியமல்லையாபுரம், சின்னமல்லையாபுரம், அழகியகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிபெட்டி, இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர், கிராமங்களுக்கு சாலை வசதிகள், மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியோர் உதவித் தொகை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் 60 வயது நிரம்பிய அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச குடிநீர் இணைப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.24 ஆயிரம் உதவித் தொகை, தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர அரசு வேலை, மாணவர்களுக்கு இலவச கைக்கணினி (டேப்லட்) உள்ளிட்ட 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: