போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல் தூத்துக்குடி மாநகராட்சியை மாணவிகள் முற்றுகை

தூத்துக்குடி, ஏப். 23: தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடப்பட்டதால் ஆவேசமடைந்த மாணவிகள், இதை கண்டித்தும், மீண்டும் திறக்க வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  தூத்துக்குடி போல்பேட்டையில் கின்ஸ் அகாடமி என்ற பெயரில் இயங்கிவரும் இலவச தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையம், டிஎன்பிஎஸ்சி, வங்கிப் பணி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இங்கு ஏராளமான ஏழை மாணவர்கள் இலவசமாக பயின்று வரும்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பயிற்சி மையத்தை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு சென்றதோடு திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து விரைந்து வந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமை யிலான போலீசார், சமரசப்படுத்தினர். மேலும் ஒட்டுமொத்தமாக யாரும் வரஅனுமதியில்லை. இருவர் மட்டும் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்க அனுமதிப்பதாகக் கூறினர். அதன்பேரில் மாணவிகளில் இருவர், ஆணையாளரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில் ‘‘பயிற்சி மையத்தில் மரத்தடியில் அமர்ந்து சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு படித்து வருகிறோம். நகரில் பல பயிற்சி மையங்கள் தற்போதும் இயங்கி வரும்நிலையில் எங்களது பயிற்சி மையத்தையும் தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.  ஆனால், இதை ஏற்க மறுத்த கொரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக பயிற்சி மையம் இயங்க அனுமதியில்லை என்றனர்..

Related Stories:

>