×

கொரோனா இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளது மாநகர நல அலுவலர் அறிவுறுத்தல் தடுப்பூசி போட்டாலும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்

வேலூர், ஏப்.23: கொரோனா இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளது, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகர நல அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2வது அலை மிக தீவிரமாக உள்ளது. கொரோனாவால் பலியாவதை விட ஆக்சிஜன் தட்டுப்பாடினால், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. லக்னோவில் குடிநீருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பதை போல, ஆக்சிஜனுக்கான சிலிண்டர்களுடன் காத்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வேலூர்மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 300யும் தாண்டி உள்ளது. வேலூர் மாநகராட்சியிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கொரோனா முதல் அலையைவிட, 2வது அலை அதிகமாக இருந்தாலும், தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும் மாஸ்க் இன்றி சுற்றும் மக்கள் அதிகளவில் உள்ளனர்.

இதுகுறித்து மாநகர நல அலுவலர் சித்ரசேனா கூறியதாவது: வேலூர் மாநகராட்சியில் கொரோனா முதல் அலையில் உயிரிழப்புகள் அதிகளவில் இருந்தது. தற்போது கொரோனா 2வது அலையில் உயிரிழப்புகள் 80 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி நம்மிடம் தற்போது உள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக மாநகராட்சியில் இன்று (நேற்று) மட்டும் 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். தடுப்பூசி போட்டாலும், வேலைக்கு சென்றோமா, வீட்டிற்கு வந்தோமா என்று இருக்க வேண்டும். அதை தவிர்த்து தேவையில்லாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருக்க கூடாது. வெளியில் செல்லும்போது மாஸ்க் இல்லாமல் செல்லாதீர்கள். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றினாலே முழு லாக்டவுன் போட வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு கூறினார்.

Tags : health ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...