×

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் திருமணம் மற்றும் விழாக்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்: பந்தல் அமைப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

திருவண்ணாமலை, ஏப்.20: திருமணம் உள்ளிட்ட விழாக்களில் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மேடை மற்றும் பந்தல் அமைப்பாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமணம் உள்ளிட்ட விழாக்களில் அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோயில் விழாக்களுக்கு தடை விதித்துள்ளனர்.

அதனால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதித்திருப்பதாக, மேடை மற்றும் பந்தல் அமைப்பாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா பரவல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பந்தல், மேடை, ஒலி மற்றும் ஒளி அமைப்பு சார்ந்த தொழிலில் தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழக அரசு உதவ வேண்டும். கோயில் விழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் 50 சதவீதம் பேர் கொரோனா விழிப்புணர்வுகளை பின்பற்றி பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Bandal Organizers Association ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...