×

திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி

திருவாரூர், ஏப்.20: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித்துறை செயலாளருக்கு சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்களாக 20 மருத்துவர்கள், 14 லேப் டெக்னிஷியன்கள், 40 மல்டி பர்போஸ் பணியாளர்கள் என மொத்தம் 74 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் கடந்த பிப்.2ம் தேதியன்று இவர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு கடந்த மார்ச் 3ம் தேதியன்று மருத்துவக்கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தோம். தற்போது, கொரோனா தொற்று 2ம் அலை அதிகமாக பரவி வருவதால் பாதிப்புகள் அதிகமாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு அரசானை எண் (எம்எஸ்) 101 பிப்.26ன்படி கொரோனா வார்டில் வேலை பார்க்கும் மல்டி பர்போஸ் ஒர்க்கர்ஸ், லேப் டெக்னீசியன் மற்றும் மருத்துவர்களை வருகிற மே 2021 வரை பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வார்டில் பணியாளர்கள் உயிரை துச்சமென நினைத்து வேலை பார்த்ததை கருத்தில்கொண்டு, அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை, அவசரம், அவசியம் கருதி மீண்டும் அவர்களை பணியமர்த்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvarur Government Hospital ,Corona Ward ,
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...