×

மின்வாரியம் அதிரடி மின்சப்ளை நிறுத்தத்தால் இருள் சூழ்ந்த ஜிஹெச் நுழைவு வாயில் மின்கட்டணம் செலுத்த திமுக மனு


ராமநாதபுரம், ஏப்.20: ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திமுக சார்பில் மின் கட்டணம் செலுத்த அனுமதி கோரி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவ ட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற தினமும் வந்து செல்கின்றனர். விபத்து மற்றும் காயப் பிரிவில் பகல், இரவு வேளையில் அவசர சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் இங்குள்ள சிறப்பு வார்டுகளில் உள்நோயாளிகளாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு இரவு வேளையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக, மருத்துவமனை வளாக நுழைவு வாயிலில் உயர்கோபுர மின் விளக்கு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இதற்குரிய மின் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக செலுத்தியது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை உள்ளதால் உயர்கோபுர மின் விளக்கு மின் கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

இந்த அறிவுறுத்தலை மருத்துவமனை நிர்வாகம் ஏற்காததால் கடந்த 2 வாரங்களாக உயர் கோபுர மின்விளக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நுழைவு வாயில் மின் வெளிச்சமில்லாததால், அவசர சிகிச்சை மற்றும் இரவு வேளையில் மருத்துவமனைக்கு வருவோர் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். மேலும் முதியவர், கர்ப்பிணிகள் அந்த வழியாக செல்ல முடியாமல், செல்போன் வெளிச்சத்தில் மருத்துவமனைக்கு செல்லும் பரிதாபம் நிலவுகிறது. இதனையடுத்து உயர்கோபுர மின் விளக்கிற்கு விநியோகிக்கப்படும் மின் பயன்பாட்டிற்கு திமுக சார்பில் கட்டணம் செலுத்த அனுமதி அளிக்க கோரி மருத்துவ கல்லூரி முதல்வர் அல்லியிடம், ராமநாதபுரம் நகர் திமுக (வடக்கு) செயலாளர் கார்மேகம் உள்பட பலர் மனு அளித்தனர்.

Tags : DMK ,GH ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...