மீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்

புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் மீண்டும் ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் ஊரை காலி செய்து தங்களது சொந்த மாநிலம் திரும்ப ரயிலில் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கடந்தாண்டு கொரோனா தடுப்புக்காக தேசிய ஊரடங்கு அமலானது. அப்போது புதுச்சேரியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் பல வாரங்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்தது. இதனிடையே தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவுவதால் வடமாநில தொழிலாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

எந்த நேரத்திலும் மத்திய, மாநில அரசுகள் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்பதால் முன்கூட்டியே புதுச்சேரியை காலி செய்து தங்களது சொந்த மாநிலம் திரும்ப முடிவெடுத்துள்ளனர். இதற்காக புதுச்சேரி ரயில் நிலையத்தில் அவர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். பஸ், கார் சேவைக்கு தமிழகத்தில் தடை போடப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களும் அடுத்தடுத்து ஊரடங்ைக அமல்படுத்தலாம் என்பதால் அதற்கு முன்பே ஊர் திரும்ப அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது. ஊரடங்கு காலத்திலும் ரயில் சேவை நிறுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>