கொரோனாவை கட்டுப்படுத்த தூத்துக்குடியில் காய்ச்சல் முகாம்

தூத்துக்குடி, ஏப்.20: கொரோனாவை கட்டுப்படுத்த தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கூறினார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார், மாநகராட்சி கமிஷனர் சரண்யாஹரி, சப்-கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அனைத்துதரப்பினரும் கடைபிடிக்கும் வகையில் செயல்படவேண்டும். கொரோனா பாதிப்பு 3க்கும் மேலுள்ள தெருக்களை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கவேண்டும். தினமும் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிக அளவில் நடத்திடவேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினமும் குறைந்தது 15 இடங்களிலாவது இம்முகாம்களை நடத்திட வேண்டும்.

கொரோனா பரிசோதனைகளை தினமும் 2500க்கு மேல் செய்திட வேண்டும். சனிக்கிழமை அன்று மேலும் கூடுதலான பரிசோதனை செய்ய வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் அங்கிருந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிக்க வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளையும் கண்காணிக்கவேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் பகுதிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கவேணடும். கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் முககவசம் அவசியம் அணிதல், பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்திடவேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, திருச்செந்தூர் ஆர்.டி.ஓ தனபிரியா, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, பொது சுகாதார இணை இயக்குநர் முருகவேல் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>