தூத்துக்குடியில் ஆட்டோ எரிப்பு

ஸ்பிக்நகர், ஏப்.20: தூத்துக்குடி, முத்தையாபுரம், சூசைநகரைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் முனீஸ்வரன் (29). இவருக்கு சொந்தமான ஆட்டோவை இவரது உடன்பிறந்த தம்பி சிவசக்தி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சிவசக்தி தனது உறவினர் வீட்டு கிரகப் பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது வீட்டருகே உள்ள காலியிடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது அந்த காலியிடம் அருகே மது அருந்திக்கொண்டிருந்த 4பேர் இரவில் 2 ஆட்டோக்களை உடைக்க வேண்டியதிருக்கிறது என்று கூறியுள்ளனர். இதைக்கேட்ட முனீஸ்வரன், அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில் வீட்டருகே நிறுத்தியிருந்த ஆட்டோ நள்ளிரவு 1 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு முனீஸ்வரன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோவின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதுகுறித்து முனீஸ்வரன், தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோவிற்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>