நெல்லை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய வாலிபர் கைது

நெல்லை, ஏப். 20: பாளையை சேர்ந்த பிரவீனின் மனைவி, கடந்த 14ம் தேதி பிரசவத்திற்காக நெல்லை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் கேடிசி நகர் ராமச்சந்திரனின் மனைவியும் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் பிரவீனும், ராமச்சந்திரனும் பிரசவ வார்டு அறையில் தங்களது செல்போன்களை சார்ஜர் போட்டுவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர், செல்போன்களை திருடிச் சென்றார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பிரவீனும், ராமச்சந்திரனும் மற்றொரு செல்போனை பிரசவ வார்டில் சார்ஜரில் போட்டபடி மர்மநபரை கண்காணித்தனர். அப்போது செல்போனை திருடிய நபரை இருவரும் பிடித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பேட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்ற மாசி (23) என்பதும், பிரவீன் உள்ளிட்ட 4 பேரின் செல்போன்களை திருடியதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் புகார்களை பெறாமலும், ரமேஷ் மீது வழக்கு பதியாமலும் விடுவித்தனர். இதையறிந்த போலீஸ் கமிஷனர் அன்பு, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மற்றொரு சம்பவத்தில் செல்போனை பறி கொடுத்த மேலப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த சுதாகர் (31) பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நேற்று அதிகாலை பேட்டையிலுள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரமேஷ் என்ற மாசியை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>