அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்

அயோத்தியாப்பட்டணம், ஏப்.20:  வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலால் தற்போது இளநீர், மோர், கம்மங்கூழ் விற்பனை அதிகரித்துள்ளது. அதே போல் ஏசி, பிரிட்ஜ் தேவையும் கூடியுள்ளது. இந்நிலையில், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் மண் பானை விற்பனை மும்முரமாக உள்ளது. அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, வாழப்பாடி, புத்திரகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மண்பாண்ட தொழில் நடைபெற்று வருகிறது. அயோத்தியாப்பட்டணத்தில் சேலம் -கருமந்துறை நெடுஞ்சாலையோரங்களில் 8 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட மண்பானை செய்து, சுமார் ₹200 முதல் 400 வரை விற்பனை செய்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க, பெரும்பாலானோர் விரும்பி வாங்கிச் செல்வதால், மண்பானை வியாபாரம் சூடு பிடித்துள்ளது. கோடை வெயிலின் காரணமாக தேவை அதிகரித்துள்ளதாலும், பானைகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதாலும் தொழிலாளர்கள் மண்பானை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories: