இரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு

கிருஷ்ணகிரி, ஏப்.20:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 பேருந்து நிலையங்களில் இருந்து இரவு 10 மணிக்குள் வேறு இடங்களுக்கு சென்றடைய பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கு(இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை) 20ம் தேதி(இன்று) அமலுக்கு வருகிறது. இதையடுத்து, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம், பொதுமக்களின் நலன் கருதி, இரவு 10 மணிக்குள் பிற மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கு சென்றடையும் வகையில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரிக்கு இரவு 9 மணிக்கும், ஓசூர், பெங்களூருக்கு இரவு 8.30 மணிக்கும், சென்னைக்கு மாலை 3 மணிக்கும், திருப்பத்தூருக்கு இரவு 9 மணிக்கும், சேலத்திற்கு மாலை 7.15 மணிக்கும், பாலக்கோட்டிற்கு இரவு 9 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 7.15 மணிக்கும், அரூருக்கு இரவு 8 மணிக்கும், வேலூருக்கு மாலை 7.15 மணிக்கும் புறப்படும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஓசூர் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரிக்கு இரவு 7.30 மணிக்கும், கிருஷ்ணகிரிக்கு இரவு 8.45 மணிக்கும், சேலத்திற்கு மாலை 6.30 மணிக்கும், பெங்களூருவுக்கு இரவு 9 மணிக்கும், வேலூர் மற்றும் திருவண்ணாமலைக்கு மாலை 6 மணிக்கும் புறப்படும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் இருந்து ஓசூருக்கு இரவு 7.30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு இரவு 8.30 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.30 மணிக்கும், திருப்பத்தூருக்கு இரவு 9 மணிக்கும் புறப்படும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரிக்கு செல்ல இரவு 8.30 மணிக்கும், ஓசூர் மற்றும் பெங்களூருக்கு இரவு 7.45 மணிக்கும் புறப்படும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பயணம் செய்ய வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>