×

குமரியில் மளமளவென அதிகரித்த தொற்று கொரோனா சிகிச்சையில் 9 குழந்தைகள், 4 கர்ப்பிணிகள் இளம்பெண் உயிரிழந்தது எப்படி? உருக்கமான தகவல்கள்

நாகர்கோவில், ஏப்.20: குமரி மாவட்டத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. பிப்ரவரி இறுதியில் 17,000 ஆக இருந்த பாதிப்பு, தற்போது 18 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. ஒன்றரை மாதத்தில் சுமார் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 100, 120 என பாதிப்பு உள்ளதால், விரைவில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடும் என அஞ்சப்படுகிறது. நேற்று முன் தினம் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 281 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் இளம்பெண்கள், வாலிபர்கள், குழந்தைகளும் அடங்குவர். நேற்று காலை நிலவரப்படி, மொத்தம் 6 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 3 பெண் குழந்தைகள் ஆகும். 2 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 கர்ப்பிணிகள் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

 ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறவர்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் அதிகம் பேர் உள்ளனர். இளைஞர்கள், குழந்தைகளை அதிகமாக  கொரோனாவின் 2 வது அலை தாக்க தொடங்கி உள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றொரு புறம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற நிலையில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ துறையினர் பணியாற்றி வருகிறார்கள். தற்போது ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு இருந்த, கொரோனா வார்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று காலை வரை 63 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு கொரோனா சிகிச்சையுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளும் கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முன் தினம் இளம்பெண் உள்பட 3 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதில் இளம்பெண் கர்ப்பிணி ஆவார்.  நெல்ைல மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த இவர், காய்ச்சல் இருந்ததால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். பின்னர் மூச்சு திணறல் அதிகரித்த பின், நாகர்கோவிலிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கடந்த 12ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ெவண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்ததில், நுரையீரல் முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், அவருக்கு குழந்தை பிறந்தது. ஏழரை மாதத்திலேயே குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சுமார் ஒன்றரை கிலோ எடை இருந்தது. இதையடுத்து பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்ளது.  இந்த நிலையில் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணுக்கு மூச்சு திணறல் அதிகமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் உயிரிழந்தார் என டாக்டர்கள் கூறி உள்ளனர். தற்போது உள்ள நிலையில் காய்ச்சல், சளி, இருமல், உடலில் அரிப்பு, வயிற்றுபோக்கு, தொண்டையில் வறட்சி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அவர்கள் உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து