×

நோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்

திருச்சி, ஏப்.19: திருச்சி ஜி.ஹெச்சில் விதிமுறைகளை மீறிய அலட்சியத்தால் சரக்கு வாகனமாக பயன்படும் வீல் சேரால் மாற்றுத்திறனாளிகள், புறநோயாளிகளை சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறுவோரும், புறநோயாளியாக பெற வருவோரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாதவர்கள் சிகிச்சை செல்வதற்கு ஏதுவாக பயன்படுத்தும் வகையில் வீல் சேர் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீல் சேரை நோயாளிகளை வைத்துக்கொண்டு தள்ளிச்செல்வதற்கு தனியாக பணியாட்களை மருத்துவமனை நிர்வாகம் நியமித்துள்ளது.

இந்நிலையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் வீல் சேர்கள் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனமாக அரசு தலைமை மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்காக அழைத்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்சில் திருவானைக்காவல் பகுதியில் இருந்து மயங்கிய நிலையில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை அவசர சிகிச்சை பிரிவு முன்பு இறக்க விட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினர்.

மயக்க நிலையில் உள்ள அவரை அழைத்துச்செல்வதற்காக, அவரது உறவினர் வீல் சேர் வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் இல்லை என தெரிவித்து விட்டனர். இதனால் செய்வதறியாது அந்த பெண்ணுடன் வந்த உறவினர் தவித்து நின்றார். அந்த நேரத்தில் அங்கிருந்த பணியாளர்கள் மருந்து பொருட்களை வீல் சேரில் வைத்துக்கொண்டு தள்ளிக்கொண்டு சென்றிருந்தனர். வீல் சேரை மருந்து பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனமாக பயன்படுத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி கேட்டபோது, அங்கிருந்தவர்கள் சரியாக பதில்சொல்ல வில்லை.

இதனால் வேதனையோடு மயங்கிய நிலையில் இருந்து பெண்ணை கை தாங்கலாக ஸ்கேன் எடுக்க அழைத்துச்சென்றனார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படும் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படுத்தப்படும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயாளிகளுக்கு தேவையான உதவிகள் சரியாக கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Trichy GH ,
× RELATED ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி ஜி.ஹெச்சில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை