சம்பளம் கேட்டதால் ஆத்திரம் டிரைவரை தாக்கிய டிராவல்ஸ் ஓனர் மீது வழக்கு

கோவை, ஏப்.19: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரும், இவரது நண்பரான அழகர் என்பவரும் கோவை சத்தி ரோட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக உள்ளனர். இருவரும் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி காந்திபுரத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு ஆம்னி பேருந்தை ஓட்டி சென்றனர். இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் சம்பளம் தருவதாக டிராவல்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்திருந்தனர். பீகார் சென்றுவிட்டு, கடந்த 13-ம் தேதி கோவை திரும்பினர். ஆனால் நிறுவனத்தினர் சம்பளம் தர மறுத்து, அதைக் கேட்க சென்ற கார்த்திக், அழகர் இருவரையும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் உட்பட சிலர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது காட்டூர் போலீஸ் நிலையத்தில் இருவரும் கடந்த 14ம் தேதி புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் போலீசார் புகாரை ஏற்க மறுப்பதாக கூறி, கார்த்திக், அழகர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் டிரைவர்கள் நேற்று முன்தினம் இரவு காட்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் புகாரின் மீது விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்த பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து டிரைவரை தாக்கியதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் என்பவர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 14ம் தேதி அளித்த புகாருக்கு காவல் நிலைய முற்றுகைக்கு பின்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>