×

கோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிப்பு

கோவை, ஏப். 19: கோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. பலருக்கு காய்ச்சல், சளி, மூச்சு திணறல், வாசனையின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்க செல்ல ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்கின்றனர்.

பின்னர், அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்குள்ள அதிகாரிகள் இங்கு ஏன் வந்தீர்கள்? என கேள்வி கேட்டு, மீண்டும் அவர்களின் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக, மதுக்கரை பகுதியை சேர்ந்த மக்கள் கொரோனா டெஸ்ட் எடுக்க பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரிசிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டியுள்ளது. மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் எடுக்க முடியாது என நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். அங்கு செயல்படும் கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலைதான் மாதம்பட்டி, வடவள்ளி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக கொரோனா டெஸ்ட் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா டெஸ்ட் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 89 உள்ளது. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கொரோனா பரிசோதனை பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. ஒரே பகுதியில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதே பகுதியில் முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்படும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்கள் கொரோனா தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.

Tags : Coimbatore district ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!