×

திருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்


திருப்போரூர், ஏப்.19: திருப்போரூர் பேரூராட்சியில், நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அடுக்குமாடி குடியிருப்புக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் 2வது இடத்தில் உள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய திருப்போரூர் பேரூராட்சியில் சான்றோர் வீதி, ஏரிக்கரை தெரு, காலவாக்கம், கண்ணகப்பட்டு, புதுத்தெரு, வணிகர் வீதி ஆகிய இடங்களில் கொரோனா தொற்று பரவலாக உள்ளது. திருப்போரூர் பேரூராட்சி எல்லையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதி பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கும், பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கண்ணகப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. இதையடுத்து அந்த குடியிருப்பு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதி. வெளியாட்கள் உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கை பேனர் பொருத்தினர். மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் கூடுதல் நோயாளிகள் கண்டறியப்பட்டால், அக்குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான தண்ணீர், காய்கறி, மருந்துகள் ஆகியவை நேரடியாக அங்கேயே சென்று வழங்கப்படும். யாரும் வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி பிரசாரம் செய்யப்பட்டது. பஸ் நிலையம், இள்ளலூர் சந்திப்பு, ரவுண்டானா உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹200 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் பணியாற்றுவோர் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், கடைகளுக்கு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களை அனுமதித்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

929 பேருக்கு 14 நாட்கள் தனிமை
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் 50 ஊராட்சிகளில் தாழம்பூர், நாவலூர், புதுப்பாக்கம், படூர் ஆகிய ஊராட்சியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதனால், பலரும் வெளியூர் சென்று வருகின்றனர். இப்பகுதிகளில் மட்டும் தொற்று அதிகமாக உள்ளது. ஒன்றியத்தில் மொத்தம் 133 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படூர் ஊராட்சியில் 21 பேரும், கேளம்பாக்கத்தில் 19, முட்டுக்காட்டில் 18,  தாழம்பூரில் 12, தையூரில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 30 ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. ஆலத்தூர், திருவிடந்தை, ஆமூர், பனங்காட்டுப்பாக்கம், தண்டலம் ஊராட்சிகளில் தலா 1, பெரிய இரும்பேடு, வடநெம்மேலி ஊராட்சிகளில் தலா 2 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மும்பை, டெல்லி உள்பட வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 929 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருங்குழி பேரூராட்சியில் தடுப்பூசி முகாம்
மதுராந்தகம்:   கருங்குழி பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று துவங்கி வரும் 23ம் தேதி வரை அந்தந்த வார்டு பகுதியில் நடக்க உள்ளது. அதேபோல், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நாளை துவங்கி, அந்தந்த வார்டு பகுதிகளில் வரும் 24ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கருங்குழி மற்றும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு)  மா.கேசவன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruporur ,
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...