மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா

பணகுடி. ஏப்.19: மகேந்திரகிரி இஸ்ரோவில் பணியாற்றும் வெளிமாநில கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பணகுடி அருகிலுள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இங்கு விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டின்  துணை உதிரி பாகங்களான கிரையோ ஜெனிக் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மத்திய அரசின் நிரந்தர பணியாளர்கள், விஞ்ஞானிகள், பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர கான்ட்ராக்ட் அடிப்படையில் பீகார், ஜார்கண்ட், அசாம் போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தனியாக கட்டிடங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை சிகிச்சைக்கு உட்படுத்தாமல் தங்கியுள்ள கட்டிடத்தை விட்டு வெளியேறி பணகுடி, காவல்கிணறு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>