×

கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.18: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டார விவசாயிகளுக்கு நடப்பாண்டு மழை சேத பாதிப்பிற்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரியும், பயனாளிகள் பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைய கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சார்பில் பூதலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (16ம் தேதி) நடைபெற்றது. இதில் ஏற்படவில்லை. இதனையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் நிவாரணம் வழங்குவதில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், விடுபட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் ஏற்றிட நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில், பூதலூர் தாலுகாவில் பருவம் தவறி பெய்த மழையால் மிகப்பெரிய அளவில் இழப்பை விவசாயிகள் சந்தித்தோம். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழக அரசு இழப்பீடு அறிவித்தது. பூதலூர் தாலுகாவில் 13,500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து சிட்டா-அடங்கல் பெறப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் 10,766 விவசாயிகளின் தரவுகள் மட்டுமே ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது.அதிலும் 1,630 பயனாளிகளுக்கு பணம் ஏறவில்லை.விடுபட்ட பயனாளிகளை இணைக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகளும், மோசடிகளும் நடைபெற்றுள்ளது. இதனை கண்டித்து அனைத்து விவசாயிகள் சார்பில் வரும் 21ம் தேதி பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Puthalur taluka ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...