கழிவுநீர் வாய்க்கால் அமைத்து சாலை அமைக்க வேண்டும் பாடாலூர் போலீசில் பொதுமக்கள் முறையீடு

பாடாலூர், ஏப்.18: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சி கற்பக விநாயகர் நகரில் சாலைப்பணியை நாங்கள் தடுக்கவில்லை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று கூறியதாக காவல்நிலையத்தில் பொதுமக்கள் முறையிட்டனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட கற்பக விநாயகர் நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ஊராட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து அதன் பின்னர் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் சாலைப் பணியை தடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாங்கள் சாலை செய்யும் பணியை தடுக்கவில்லை. கழிவுநீர் வாய்க்கால் அமைத்து அதன் பின்னர் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் எனக்கூறி பாடாலூர் காவல் நிலையத்தில் முறையிட்டனர். இதனை கேட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>