தடுப்பூசி இருப்பு இல்லாததால் வெறிச்சோடி கிடந்த ஆரம்ப சுகாதார மையம்

தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா தடுப்பூசி இல்லாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுகாதார மையம் வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நாள் தோறும் கொரோனா 2ம் பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை, நகராட்சி சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நகராட்சி சந்தைபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இம்முகாமில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட்டு வந்தனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்தது. இதையடுத்து வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் வந்தனர். இதில் நேற்று சந்தைபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தடுப்பூசி போடும் பணி முடிந்தது. போதிய அளவில் தடுப்பூசி இல்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி விடும்,’ என்றனர்.

Related Stories:

>