×

கடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி

புதுச்சேரி, ஏப். 18: புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 715 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது செப்டம்பர் 24ம் தேதி அதிகபட்சமாக 668 பேர் தான் பாதிக்கப்பட்டு இருந்தனர். இப்போது அதை விட பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 4,748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-567, காரைக்கால்-88, ஏனாம்-35, மாகே-25 என மொத்தம் 715 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 47,108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3,369 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தமாக 4,090 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,313 (89.82 சதவீதம்) ஆக உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 7,24,132 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 6,59,076 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள் 29,952 பேர், முன்கள பணியாளர்கள் 17,672 பேர், பொதுமக்கள் 1 லட்சத்து 664 பேர் என மொத்தம் 1,48,288 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Tags : Corona ,Puduvayal ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...