×

நாகர்கோவிலில் மனைவி, குழந்தைகளை கடத்தி விடுவதாக கந்துவட்டி கும்பல் மிரட்டல்

நாகர்கோவில், ஏப்.18:  நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் ரகுமான் (41). புகைப்பட கலைஞர். இவர் நேற்று தனது குடும்பத்துடன், எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : நான், இடலாக்குடியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறேன். ஒரு திருமண விழாவில் திட்டுவிளையை சேர்ந்த குடும்பத்தின் நட்பு கிடைத்தது. அந்த குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை இருவரும் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார்கள். தொழில் ரீதியாக பணம் தேவைப்பட்டால், குறைந்த வட்டியில் வாங்கிக் கொள்ளுங்கள். காசோலைகளும், வெற்று பத்திரத்தில் கையெழுத்தும் போட்டு தந்தால் போதும் என்றனர்.

கடந்த 2019 ல் அவர்களிடம் மூன்று தவணைகளாக  R1.50 லட்சம் பெற்றேன். மேற்படி கடன் தொகைக்கு  R50 ஆயிரத்துக்கு  R 3 ஆயிரம் வைத்து மாதந்தோறும்  R9 ஆயிரம் கொடுத்து வந்தேன். மேலும் பணம் தேவைப்பட்டதால் பல தவணைகளாக  R1.50 லட்சம்,  R80 ஆயிரம், ஒரு லட்சம் என பெற்றுக் கொண்டேன். அவ்வப்போது கடன் வாங்கும் போது நிரப்பப்படாத காசோலைகளில் கையொப்பம் பெற்றுக் கொள்வார்கள். வட்டி மற்றும் அசல் பணத்தை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்து உள்ளேன். இந்த நிலையில் எனது தொழில் நஷ்டம் காரணமாக கடந்த பிப்ரவரியில் எனது ஸ்டூடியோவை மூடினேன். அப்போது என்னை தொடர்பு கொண்டு வட்டி பணம் பற்றி கேட்டனர். ஏற்கனவே நான் வாங்கிய கடனுக்கு மேல் பணம் தந்து விட்டேன். பிறகு ஏன்? வட்டி பணம் கேட்கிறீர்கள் என்றேன். இதற்கு என்னை கும்பலாக வந்து மிரட்டியவர்கள், R23 ஆயிரம் தந்தால் அனைத்து கணக்கையும் முடித்துக் கொள்வோம் என்றனர். நானும், அதன்படி பணத்தை கொடுத்தேன். ஆனால் தொடர்ந்து என்னையும், எனது குடும்பத்தையும் மிரட்டுகிறார்கள்.

மனைவி, மகள், மகனை கடத்தி வெளி மாநிலத்தில் விற்பனை செய்து விடுவதாக கூறுகிறார்கள். இவர்களுக்கு பயந்து நான் தற்ெகாலை முயற்சியில் ஈடுபட்டேன். எனது நண்பர்கள் தான் காப்பாற்றினர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்த என்னை வீடு புகுந்து கத்தியால் கீறினர். கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். தொடர்ந்து கந்து வட்டி கும்பலால் நான் உயிர் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த கும்பலிடம் இருந்து என்னையும், எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். ஏடிஎஸ்பி ஈஸ்வரன், மனுவை பெற்று டி.எஸ்பி. வேணுகோபால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை