×

பக்தர்கள் அனுமதியின்றி மானாமதுரையில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஏப்.24ல் திருக்கல்யாணம்

மானாமதுரை, ஏப்.18:  கொரோனா 2வது அலை காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையால் பக்தர்கள் அனுமதியின்றி மானாமதுரையில் ஆனந்த வல்லியம்மன் சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மானாமதுரை வைகைஆற்றின் கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை மாதம் பத்துநாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சோமநாத சுவாமி, ஆனந்தவல்லி அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு மண்டகப்படி தாரர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர். இந்தாண்டிற்கான திருவிழா துவங்குவதற்கு முன் கொரோனா 2வது அலை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை ஆனந்தவல்லி சோமநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடி திருவீதி உலாவிற்கு எடுத்து செல்லப்பட்டு கொடிமரத்திற்கு சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களினால் அபிஷேகங்கள் நடத்தி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. விழா காலங்களில் சுவாமி, அம்பாள் விக்கிரகங்களுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு கோயில் உட்பிரகாரத்தில் வெவ்வெறு வாகனங்களில் உலா வருதல் நடைபெறும். தொடர்ந்து வரும் ஏப்.24ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொடியேற்றத்தின் போது தேவஸ்தான ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Tirukkalyanam ,Chithirai festival ,Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...