×

நெல் கொள்முதலில் முறைகேடு சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்

சிவகங்கை, ஏப்.18: சிவகங்கை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் சந்தியாகு, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் மாணிக்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து 56 மையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இக்கொள்முதலில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. சிவகங்கை அருகே புல்லுக்கோட்டை நெல்கொள்முதல் நிலையத்தில் அதன் பொறுப்பாளர் நெல்கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபோன்று லஞ்சம் பெறும் நிகழ்வு மாவட்டம் முழுவதும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பொறுப்பேற்க வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் பத்து ஒன்னு நகலை சரி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது இவர்கள் செய்த முறைகேடு வெளி வரும். இதுகுறித்து உடனடியாக சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும். விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல் உரவிலையை பலமடங்கு உயர்த்தியுள்ளனர்.
இதனை திரும்பபெற வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஏப்.21ல் தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : CPCIT ,
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை