நடிகர் விவேக் படித்த கல்லூரியில் அஞ்சலி

மதுரை, ஏப். 18: மறைந்த நடிகர் விவேக்கிற்கு, அவர் படித்த அமெரிக்கன் கல்லூரியில் நேற்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1978-1981ம் ஆண்டுகளில் பிகாம் படித்தார். அவரது மறைவையொட்டி, கல்லூரி வளாகத்திற்குள் விவேக்கின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பேராசிரியர்கள், நடிகர் விவேக்குடன் படித்த நண்பர்கள் விவேக் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தவமணி கிறிஸ்டோபர் கூறுகையில், ‘எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான நடிகர் விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாதது. எங்கள் கல்லூரி வளாகத்தில் பல்வேறு மரங்களை, அவர் நட்டு வைத்துள்ளார். அவர் மறைந்தாலும், இந்த மரங்களில் காற்றாக வாழ்ந்து, அனைவரின் நினைவில் நிலைத்திருப்பார்’’ என்றார். மவுன அஞ்சலி: தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் நடிகர் விவேக் மறைவிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க பொதுச்செயலாளர் வினோத், குறும்பட இயக்குனர் விக்டர் முன்னிலை வகித்தனர். அப்பா பாலாஜி, தங்கராஜ், மனோகரன் உள்ளிட்ட துணை நடிகர், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன், சங்க அலுவலக மேலாளர் பாலா ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories:

More
>