×

பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல்

திருப்பூர், ஏப். 18: பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு முழுமையாகத் தடை செய்து உள்நாட்டு நூல் உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்று சைமா சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் வைகிங் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த 6 மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடந்த மார்ச் 15-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதன் பிறகும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆகவே, பஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு முழுமையாகத் தடை செய்து உள்நாட்டு நூல் உற்பத்தியை உயர்த்த வேண்டும். நூல் ஏற்றுமதியை 50 சதவீதமாகக் குறைத்து உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு இல்லாமல் நூல் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Tags : Saima ,
× RELATED பருத்தி விலை ஏற்றம் காரணமாக நூற்பாலைகள் பீதி அடைய வேண்டாம்