திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது

திருச்சி, ஏப். 17: திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்கியது. இதில் 11ஆயிரம் பேர் செய்முறை தேர்வு எழுதினர். 317 பேர் தேர்வுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு வழிகாட்டல்களை பின்பற்றி, செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, கொரோனா விதிகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கியது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களில் 195 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 257 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 17,900 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் நேற்று 11,373 பேர் செய்முறை தேர்வில் பங்கேற்க இருந்தனர். அதில் 11,056 பேர் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். 317 பேர் செய்முறை தேர்வுக்கு வரவில்லை. இன்றும் செய்முறை தேர்வு நடக்கிறது. செய்முறை தேர்வு மதிப்பெண்கள் 24ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>