காரைகுறிச்சி கிராமத்தில் குண்டும் குழியுமான தார் சாலை சீரமைக்க வேண்டும்

தா.பழூர், ஏப்.17: காரைக்குறிச்சி கிராமத்தில் குண்டும் குழியுமான தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைகுறிச்சி கிராமத்தில் இருந்து மைக்கேல்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையை பயன்படுத்தி காரைக்குறிச்சி கிராமத்தில் இருந்து மைக்கேல்பட்டி வழியாக சுத்தமல்லி மற்றும் நாயகனை பிரியாள் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல மக்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த சாலை மார்க்கம் உள்ள காரைக்குறிச்சி, இருகையூர், தா.பழூர், மைக்கேல்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வர இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாய நிலங்களுக்கு விதை உரம் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு செல்வதற்கும், விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்வதற்கும் இந்த சாலை பெரிதும் பயன்படுகிறது. அதிகப்படியான பயன்பாடுகள் உள்ள சாலை பெரிய அளவில் பள்ளமாக கிடைக்கின்றது. சாலை நெடுக்க குண்டும் குழியுமாக கிடப்பதால் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையில் இடைப்பட்ட பகுதியில் வீடுகள் இல்லாததால் மின் விளக்குகள் கிடையாது. இதனால் பெரிய அளவிலான பள்ளங்கள் வாகன ஓட்டிகள் கணிக்க முடியாத அளவிற்கு இருப்பதால் விபத்துகளும் நடப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>