தோகைமலை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள், தரைக்கடை ஆக்கிரமிப்பால் கடும் அவதி

தோகைமலை, ஏப்.17: தோகைமலை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தோகைமலையில் உள்ள பஸ் நிலையம் ஊராட்சிகளுக்கான பஸ் நிலையங்களில் தமிழகத்திலேயே 2வது இடத்தில் உள்ளது. தோகைமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை போன்ற ஒன்றியங்களில் உள்ள குக்கிராமங்களுக்கு தோகைமலை மையப்பகுதியாக இருந்து வருகிறது. குளித்தலை, மணப்பாறை மற்றும் பாளையம் திருச்சி ஆகிய மெயின் ரோடுகள் இணையும் பகுதியில் தோகைமலை அமைந்துள்ளது. மேலும் தோகைமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், விவசாயம், கட்டிட தொழில்கள் என பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு வசதியாக தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தோகைமலை வழியாக வந்து செல்கிறது. இதனால் திமுக, அதிமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூ கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தோகைமலைக்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தோகைமலையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.65 கோடியில் பயணிகள் நிழற்குடையுடன் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் சிமெண்ட் தரைகள் அமைத்து தோகைமலை பஸ் நிலையம் தரம் உயர்த்தப்பட்டது. பஸ் நிலையத்தின் வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகள், தரைக்கடைகள் 47 என மொத்தம் 52 கடைகள் உள்ளது. இந்நிலையில் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் கார், வேன்கள், சரக்கு ஆட்டோக்கள் உள்பட பல்வேறு தனியார் வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தோகைமலை பஸ் நிலையம் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் பஸ்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு அனுமதி அளித்துள்ள அளவைவிட கூடுதலாக சுமார் 30 அடிகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆகவே தோகைமலை பஸ் நிலையத்தில் இரவு நேரங்களை தவிர தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கவும், இதே போல போக்குவரத்திற்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றவும் தோகைமலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>