×

உதவியாளருக்கு கொரோனா தொற்று நெல்லை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி பிரிவு மூடல்

நெல்லை, ஏப். 17: நெல்லை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சிப் பிரிவில் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வளர்ச்சிப் பிரிவு கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. நெல்லை கலெக்டர் அலுவலகம் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் இயங்குகிறது. தரை தளத்தில் கருவூலப் பிரிவு, பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, கூட்ட அரங்கம், முதல் தளத்தில் மாவட்ட கலெக்டரின் அறை, மாவட்ட வருவாய் அலுவலரின் அறை, தேசிய தகவலியல் மையம், வருவாய் துறையின் முக்கிய அலுவலகங்கள், இரண்டாம் தளத்தில் மாவட்ட வழங்கல் பிரிவு, தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு அலுவலர், உதவி கலெக்டர் (பயிற்சி) அறை உள்ளிட்ட அலுவலகங்களும், மூன்றாம் தளத்தில் ஊரக வளர்ச்சித் துறை நேர்முக உதவியாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (ஊராட்சி), உதவி இயக்குநர் (தணிக்கை), நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என மூன்றாம் தளம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையின் பல்வேறு அலகுகள் உள்ளன.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணியில் மண்டல அலுவலர் குழுவில் தேர்தல் பணியாற்றினார். பின்னர் கடந்த 8, 9ம் தேதிகளில் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அலுவலகத்திற்கு வரவில்லை. நேற்று முன்தினம் அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று காலை ஊரக வளர்ச்சித் துறை நேர்முக உதவியாளர் அலுவலகத்திற்கு வந்த அலுவலர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அந்த அலுவலகம் மூடப்பட்டு நெல்லை மாநகராட்சி, தச்சை மண்டல சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். ஊழியர்கள் அனைவரும் திங்கட்கிழமை பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டது. தடுப்பூசி போடாத ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Tags : Corona Infected Paddy Collector Office Rural Development Division ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது