சித்திரை தேர்த்திருவிழா 2வது ஆண்டாக ரத்து

இடைப்பாடி, ஏப்.17: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, இடைப்பாடி சித்திரை தேர்த்திருவிழா, 2வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் 4 நாட்கள் தேர்த்திருவிழா நடக்கும். கடந்தாண்டு கொரோனா ஊராடங்கு காரணமாக, சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு சித்திரை தேர்த்திருவிழா நாளை (18ம்தேதி) துவங்கி 30ம்தேதி வரை நடைபெறும் எனவும், சுவாமி திருக்கல்யாணம் 25ம்தேதியும், தேரோட்டம் 26 முதல் 29ம்தேதி வரை நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.ஆனால், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், கடந்த 10ம்தேதி முதல் கோயில் திருவிழாக்கள், மத சடங்குகள் நடப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இதனால் இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம், இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைப்பாடி அடுத்த ஆலாச்சம்பாளையத்தில் 50 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் கோயில் திருவிழா நடைபெறும் ஊர்களுக்கு சென்று ராட்டினம் அமைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். கொரோனா பரவலால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களில், விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வேலை இழந்து பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, வழிகாட்டி நெறிமுறைகளுடன் திருவிழாக்கள் நடத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி, தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>