வேளாண், தோட்டக்கலைத்துறை பதவிகளுக்கு தேர்வு 11 தேர்வு மையங்களில் 6,686 பேர் எழுத ஏற்பாடு

சேலம், ஏப். 17:சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை பதவிகளுக்கான எழுத்துத்தேர்வை, 11 மையங்களில் 6,686 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, டிஎன்பிஎஸ்சி மூலம் இன்று தொடங்கி, வரும் 19ம் தேதி வரை, 3 நாட்களுக்கு நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் 6,686 பேர் இத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்களுக்காக 11 தேர்வு மையங்களில், 21 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை கண்காணிப்பதற்காக 6 நடமாடும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளகின்றனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பித்துள்ள தேர்வுகள், தேர்வு துவங்குவதற்கு 45 நிமிடம் முன்னதாக கட்டாயம், தேர்வு மையத்திற்கு வருகை தரவேண்டும். அதன்பிறகு வருபவர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>