×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முகாமிற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. தொடர்ந்து 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 வயதை கடந்தவர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 14ம் தேதி வரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 55 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில், பரவல் வேகமெடுத்துள்ளதால் தினமும் தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம் உள்பட பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் பலரும் நேற்று தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். காலையில் மட்டும் சிலருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், அதன் பிறகு தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி இருப்பு உள்ள வரையில் தினமும் போடப்பட்டு வருகிறது. இன்று(17ம் தேதி) மேலும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னையில் இருந்து வருகின்றன. எனவே, தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது,’ என்றனர்.

Tags : Krishnagiri district ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...