அகரம்பிரிவு சாலையில் பேரிகார்டுகள் வைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

காரிமங்கலம், ஏப்.17:தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பிரிவு ரோடுகளில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாமல், நான்கு வழி சாலையாக அமைத்துவிட்டனர். குறிப்பாக மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம், அகரம் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலம் இல்லாததால், இப்பகுதிகள் விபத்து நடக்கும் பகுதிகளாகவே மாறிவிட்டது. குறிப்பாக காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு, அப்பாவி மக்கள் தொடர்ந்து உயிரிழப்பது நடந்து வருகிறது.

இதேபோல் மாட்லாம்பட்டி குப்பாங்கரை பிரிவு சாலை மற்றும் பைசுஅள்ளிப் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில், டூவீலர்களில் செல்வோர் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளதால், விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி, எச்சரிக்கை விளக்குகளை அமைப்பதுடன், நிரந்தரமாக பேரிகார்டுகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>