×

மயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்போரூர், ஏப்.17: மயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் மயிலை ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மந்தைவெளி தெரு, குடிநீர் தொட்டி தெரு மற்றும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியிலும் குடிநீர் விநியோகத்தில் கடந்த ஒரு ஆண்டாக சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை விரிவாக்கத்தின்போது மயிலை கிராமத்துக்கு குடிநீர் கொண்டு வரப்பட்ட குழாய்களில் சேதம் ஏற்பட்டது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக 2 நாட்களுக்கு குடிநீர் வந்தால், அடுத்த ஒரு வாரத்துக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இதையொட்டி ெபண்கள், தங்களது குழந்தைகளுடன் நீண்ட தூரம் சென்று வயல்வெளிகளில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதுபற்றி பலமுறை ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்துக்கு மயிலை கிராம மக்கள் சென்றனர். அங்கு, முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, தினமும் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் குறித்த பிரச்னைகளை புகாராக தெரிவித்தால் அவதூறாக பேசும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு புகார்களை கூறி கோஷமிட்டனர்.
இதையடுத்து, திருப்போரூர் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சைமன் ஜெரால்டு, அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர் விநியோகம் செய்யும் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2 நாட்களில் சரி செய்யப்பட்டு தினமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பொதுமக்களை அவதூறாக பேசும் ஊராட்சி செயலாளர் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருடன் கலந்து பேசி, கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Thiruporur ,Mayilai ,
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...