×

தேனி ஜிஹெச் கொரோனா பரிசோதனை மையத்தில் சுத்தமா இல்லை சமூக இடைவெளி தொற்று அதிகரிக்கும் அபாயம்

ஆண்டிபட்டி, ஏப். 17: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் நிற்பதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே க. விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று  துவக்கத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் இங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து கொண்டே வருவதால் தேனி மாவட்டத்தில் சுகாதார துறையினர் நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நெருங்கியவர்கள் என அனைவரிடமும் பரிசோதனைகளையும் அதிகரித்துள்ளனர். இதனால் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ய வருபவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இங்கு யாருமே சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நிற்கின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. அரசு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அதனை மருத்துவமனைகளிலும் கடைபிடிக்காமல் இருப்பது தொற்றை அதிகரிப்பதற்கு மருத்துவர்களே வாய்ப்புகளை தருகிறார்கள் என புகார் எழுந்துள்ளது. எனவே கொரோனா  பரிசோதனை மையத்தில் வரும் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிறுத்துவதற்கு, மருத்துவமனை பணியாளர்கள் மட்டுமின்றி தனியார் ஊழியர்களை வைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : GH Corona Testing Center ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது