×

ஆடிவீதியில் மீனாட்சியம்மன், சுவாமி உலா சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க கோரிக்கை

மதுரை, ஏப். 17: சித்திரை திருவிழாவையொட்டி ஆடி வீதியில் உலா வரும் மீனாட்சியம்மான், சுவாமிகளை சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய அனுமதிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடந்த நாளில், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் அருள்பாலித்தனர். அன்று மாலை கற்பகவிருட்ச, சிம்ம வாகனங்களிலும், நேற்று (ஏப்.16) மாலை-பூத, அன்ன வாகனங்களிலும் ஆடி வீதியில் உலா வந்தனர். இன்று மாலை கைலாச பர்வதம், காமதேனு வாகனத்திலும், நாளை (ஏப்.18) காலை, மாலை-பல்லக்கு வாகனத்திலும் வலம் வருகின்றனர். ஏப்.19 மாலை குதிரை வாகனம், ஏப்.20 மாலை-ரிஷப வாகனம், ஏப்.21 மாலை-நந்தி, யாளி வாகனங்களிலும், ஏப்.22 காலை-பல்லக்கிலும் காட்சி தருகின்றனர். தொடர்ந்து ஏப்.22 மாலை பட்டாபிஷேகம் நடக்கிறது. அன்று வெள்ளி சிம்மாசனத்திலும், ஏப்.23 மாலை திக்விஜயம் நடக்கும்போது, இந்திர விமானத்திலும் காட்சி தருகின்றனர். ஏப்.24 காலை - திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிரவு, ஏப்.24 யானை வாகனம், பூப்பல்லக்கிலும் காட்சி தருகின்றனர். ஏப்.25 காலை சட்டத்தேர் நிகழ்ச்சியும், அன்றிரவு சப்தாவர்ணம் வாகனத்திலும், ஏப்.26 தீர்த்தவாரி நாளில் ரிஷப வாகனத்திலும் அம்மன் சுவாமி உலா வருகின்றனர். மீனாட்சி கோயில் பக்தர்கள் கூறுகையில், ‘ஆடிவீதிகளில் உலாவரும் சுவாமி, அம்மனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அம்மன், சுவாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Meenakshiamman ,Adiveedi ,Swami Ula ,
× RELATED ஆன்மிகம் பிட்ஸ்: காம்பீலி அம்மன்