நரிக்குடி அருகே கிட்டங்கி இல்லாததால் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் வீணாகும் அவலம் விவசாயிகள் கண்ணீர்

திருச்சுழி, ஏப். 16: நரிக்குடி அருகே கிட்டங்கி இல்லாததால் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி பகுதியில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் நெல் பயிரிட்டனர். அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக நாலூர், நரிக்குடி, உலக்குடி, வேளாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்தாலும் இதுவரை பணம் சரிவர பட்டுவாடா செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நாலூரிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கிட்டங்கி இல்லாததால் திறந்தவெளியில் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்து வருகின்றன. தொடர்ந்து மழை பெய்தால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: