கோவையில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற திட்டம்

கோவை, ஏப்.16: கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமின்றி கொடிசியா வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த வசதிகளும் போதாததால் கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வை தடுக்க வேண்டும்கோவை, ஏப்.16:  மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்துள்ளன. இதனை தடுக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான கோக், பிக்அயர்ன், ஸ்கிராப், எச்ஆர் சீட், சிஆர் சீட், காப்பர், அலுமினியம், கிராப்ட் பேப்பர், பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மிக கடுமையாக பாதித்துள்ளது. ஸ்டீல் மற்றும் பவுண்டரிக்கு தேவையான மூலப்பொருட்கள் 70 சதவீதம் விலை உயர்ந்துள்ளன. இந்த நிலை தொடர்வது அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளையும் பாதிப்பதோடு பல தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கும் கொண்டு சென்றுவிடும்.

கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை ஸ்டீல் விலை டன்னுக்கு 6000 ரூபாய் உயர்ந்திருப்பதோடு, வரும் நாட்களில் மேலும் 5000 ரூபாய்க்கு மேல் உயரும் வாய்ப்பு உள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை தடுக்க மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். மாத அடிப்படையில் மூலப்பொருட்களின் உயர்ந்த பட்ச விலையை நிர்ணயித்தல். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்தல். இரும்பு தாது மற்றும் ஸ்டீல் ஏற்றுமதியை கட்டுப்படுத்துதல். ஸ்கிராப் இறக்குமதி வரியை நீக்குதல். ஸ்டீலுக்கான இறக்குமதி வரியை 6 மாதங்களுக்கு நீக்குதல். தேவைக்கு ஏற்றபடி மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல். இது எங்களது முக்கிய கோரிக்கைகள் ஆகும்.மேலும், முன்பு இருந்தது போல கோவையில் செயில் நிறுவனத்தில் மூலப்பொருட்களின் கிடங்கை மீண்டும் திறக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை மானிய விலையில் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே, நடப்பு மூலதனத்தை முழுவதும் பயன்படுத்திவிட்டு தங்களுடைய தொழிலை நடத்துவதற்கான கடுமையான நிதி பற்றாக்குறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளனர். இந்த சிக்கலில் இருந்து விடுபடும் வகையில் அரசு, மேலும் 20 சதவீதம் கூடுதல் கடன் உதவி வழங்க வேண்டும். இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ஒரு கொள்கை முடிவை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு பிரதமர், உருக்குத்துறை மத்திய அமைச்சர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை மத்திய அமைச்சர் மற்றும் தொழில்வணிகத் துறை அமைச்சர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>