முஷ்ணம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி சோகத்தில் கிராம மக்கள்

முஷ்ணம், ஏப். 16: முஷ்ணம் அருகே வாலிஸ்பேட்டையில் உள்ள ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே வாலிஸ்பேட்டையை சேர்ந்த லெனின்-மேகலா தம்பதியரின் ஒரே மகன் கவின் (4), பிரகாசராயர்-ரத்தினமேரி தம்பதியரின் ஒரே மகன் சஞ்சை (8). நேற்று காலை சிறுவர்கள் 2 பேரும் வாலிஸ்பேட்டை கோக்கட்டை ஏரிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளனர். சிறுவர்கள் மீண்டும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் எங்கு சென்றார்கள் என தேடியுள்ளனர். இந்நிலையில் மாலை 4 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த அற்புதம் என்பவர் கோக்கட்டை ஏரிக்கு சென்ற போது ஏரியில் மிதந்த நிலையில் இருந்த சஞ்சயை பார்த்து மீட்டுள்ளார். இதையடுத்து கவின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் சந்தேகமடைந்து ஏரியில் தேடிய போது கவினும் சடலமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து தகவலறிந்து முஷ்ணம் காவல் ஆய்வாளர் வினதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ரகுமாறன், செல்வராஜ், சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் கமலகாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவர்கள் 2 பேரும் இயற்கை உபாதைக்காக ஏரிக்கு சென்றிருக்கலாம் எனவும் அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் ஏரியில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சஞ்சையின் தந்தை கோயம்புத்தூரில் உணவகத்தில் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உள்ளார். கவினின் தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிறுவர்கள் 2 பேர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More