×

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போலீசார் சமரசம் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, ஏப்.16: ஆரணி அருகே 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள கீழ்பட்டு ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த 6 மாதங்களாக சரிவர வேலை வழங்கவில்லை என்றும், ஆண்டுக்கு 35 நாட்கள் மட்டுமே வேலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.மேலும், மாற்றுத்திறனாளியாக இல்லாத நபர்களுக்கும் மாற்றுத்திறனாளிக்கான அட்டை வழங்கி 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மற்ற தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 100 வேலையை முழுமையாக வழங்கக்கோரி, ஊராட்சி தலைவர் வேண்டாமணி, ஊராட்சி செயலாளர் வேலாயுதம், சேத்துப்பட்டு பிடிஓ ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கீழ்பட்டு ஊராட்சி பொதுமக்கள், ஆரணி- திருவண்ணாமலை சாலையில் வடமாதிமங்கலம் கூட்ரோடு பகுதியில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த களம்பூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சேத்துப்பட்டு பிடிஓவிடம் நாளை (இன்று) நேரில் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...