×

பல சார்பதிவாளர் அலுவலகங்கள் இட நெருக்கடியில் இருக்கும்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் கல்யாண மேடை செட்: சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

திருப்போரூர், ஏப்.16: தமிழகம் முழுவதும் 575க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பொதுமக்கள் தங்களின் சொத்து விற்பனை, அடமானம், செட்டில்மெண்ட், உயில், குத்தகை ஆகியவற்றை பதிவு செய்யவும், திருமணம், பிறப்பு, இறப்பு பதிவு செய்து சான்றிதழ்கள் பெறவும் இந்த அலுவலகங்களுக்கு செல்கின்றனர். தமிழக அரசுக்கு அதிக வருவாய் தரும் துறைகளுள் ஒன்றாக பதிவுத்துறை விளங்குகிறது. கடந்த வாரம் இத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் மங்கலகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதனால்,  பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் இந்த உத்தரவு பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. இதைதொடர்ந்து, தற்போது பதிவுத்துறை மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் ஒரே மாதிரியான கல்யாண மேடை செட் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சார் பதிவகங்களில் திருமணம் பதிவு செய்யும்போது, அந்த கல்யாண மேடை செட்டில் வைத்து செய்ய வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பல அலுவலகங்கள் இட நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் தொற்றை பரப்பும் முக்கிய காரணியாக பதிவு அலுவலகங்கள் இருந்ததால், கடந்த ஆண்டு 2 மாதங்கள் மூடி வைக்கப்பட்டன. இந்தவேளையில், தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வரும் நேரத்தில், பதிவு அலுவலகங்களில் இந்த கல்யாண மண்டப செட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணப் பதிவின்போது மணமக்கள் தனித்தனியே புகைப்படம் எடுக்கப்பட்டு, பயோமெட்ரிக் முறையில் அவர்களது கைரேகைகளும் சேகரிக்கப்படுகின்றன. மேலும், திருமண மண்டப செட் அமைத்து அங்குதான் திருமணங்கள் பதிவு செய்ய வேண்டும் என்பது கேலிக்கூத்தாக முடியும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால், அவர்களை ஜோடியாக புகைப்படம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, அதற்கு தனியாக கேமரா பொருத்தி, இந்த வேலைகளை செய்ய கூடுதல் பணியாளர்கள் இல்லாத நிலையில் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கும் அபாயமும் உள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஒரே மாதிரியான கல்யாண மேடை செட் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில், அத்துறைக்கும்  ஏதேனும் வில்லங்கம் இருக்கலாம் என சந்தேகம்  எழுந்துள்ளது.

சார்பதிவகங்களில் திருமணம்?
சினிமாக்களில்தான் பதிவு அலுவலகங்களில் திருமணம் நடத்தப்படுவதாக காட்சிகள் அமைக்கப்படும். ஆனால் உண்மையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணம் நடத்தி வைப்பதில்லை. திருமண மண்டபங்களிலோ, பொது இடத்திலோ, கோயில்களிலோ ஏற்கனவே நடந்த திருமணத்தை பதிவு செய்யும் இடம்தான் பத்திரப்பதிவு அலுவலகங்களே தவிர, திருமணம் செய்து வைக்கும் இடம் அல்ல. அதனால் கல்யாண மண்டப மேடை செட் தேவையில்லாத செலவினம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...